
டாக்டர்.ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர்,
மிஸஸ் மருத்துவமனை,
பொள்ளாச்சி,கோவை மாவட்டம்.
கடந்த 5 வருடத்தில் என்னிடம் பல ஆயிரம் பேர் (பேலியோ மீட்டிங்கில்,என்னுடைய கிளீனிக்கில் ,ஃபேஸ்புக் குழுவில் )இது வரை உணவு பரிந்துரை பெற்று உள்ளார்கள்.
எங்கள் கிளீனிக்கில் என்னுடைய மனைவி குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர்.சுமதி ராஜாவிடம் உணவு ஆலோசனை பெற்று குழந்தை பாக்கியம் பெற்றுள்ளார்கள்.
அவர்கள் பொதுவாக கேட்கும் சந்தேகங்களை தொகுத்து அதற்கு விடை அளித்துள்ளேன்.
நானும் 2015 முதல் முறையாக இந்த உணவு முறையை கடைபிடித்து 20 வருடமாக எனக்கிருந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.
புதியதாக உணவு தொடங்க இருப்பவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
1.எவ்வளவு நாட்களுக்கு பிறகு நார்மல் புட் சாப்பிடலாம் ?
பேலியோ உணவு தான் மெட்டபாலிக் பிரச்சினை உள்ளவர்களுக்கு நார்மல் உணவு,தற்போது சாப்பிட்டு கொண்டுள்ள அதிக மாவுச்சத்து குறைந்த கொழுப்பு உணவு தான் அப்நார்மல் உணவு.
நம்முடைய டார்கெட் எடை மற்றும் ரத்தப்பரிசோதனை அளவை அடைந்த பிறகு ஒருவேளை மட்டும் குறைந்த அளவில் மாவு சத்து உணவுகளை உணவில் சேர்த்து உண்ண முடியும்.
வாழ்நாள் முழுவதும் பேலியோவை முறையாக கடைபிடித்தால் நமக்கு பலன் கிடைக்கும்.
2.பேலியோ உணவை கடைபிடித்தால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா?
பேலியோ உணவு முறை மாற்றத்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். குணப்படுத்த முடியாது. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்-பேலியோ உணவுமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும்.
3.பேலியோ உணவுமுறை மூலம் சக்கரை மாத்திரைகள், இன்சுலின் ஊசி அனைவராலும் நிறுத்த முடியுமா?
முறையாக பேலியோ உணவுமுறை கடைபிடித்து,அதனுடன் உடற்பயிற்சி செய்தால் மாத்திரைகள் இன்சுலின் ஊசிகள் சிலரால் நிறுத்த முடிகிறது .சிலரால் மாத்திரைகள், இன்சுலின் அளவு குறைக்க முடிகிறது.
4.டைப் 1 ,டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களும் பேலியோ உணவு முறையால் இன்சுலினை நிறுத்த முடியுமா முடியுமா?
டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கணையம் இன்சுலின் சுரக்கும் தன்மை முழுவதும் இல்லாமல் இருக்கும் அவர்கள் பேலியோ உணவு முறையை பாலோ பண்ணும் போது அவர்களுக்கு தேவைப்படும் இன்சுலின் அளவுகளை குறைக்க முடியும், நிருத்த முடியாது.
டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில வருடங்கள் கழித்து டைப்-1 சர்க்கரை நோயாளிகளாக மாறிவிடுவார்கள் அவர்களும் இன்சுலின் அளவை குறைக்க முடியும் நிறுத்த முடியாது. டைப் 2 சர்க்கரை நோயாளிகள் பலரால் முறையாக பேலியோ உணவு முறையை கடைபிடித்து மாத்திரைகள் இன்சுலினை நிறுத்த முடிகிறது.
5.சர்க்கரை நோயாளிகள் பேலியோ உணவு முறையை கடைபிடிக்கும் போது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதால் என்ன பலன்?
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவர்கள் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் போல ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.சர்க்கரை நோயினால் வரக் கூடிய இருதய,கிட்னி,மூளை போன்ற உடல் உள்ளுறுப்பு பாதிப்புகள் ஏற்படாது.
6.பாதாம் தோல் உறித்து சாப்பிடலாமா , தோலோடு சாப்பிடலாமா?
பாதாம் தோலில் வைட்டமின் ஈ ,மெக்னீசியம் உள்ளதால் தோலுடன் சாப்பிடுவது நல்லது.
7.பாதாம் 100 கிராம் சாப்பிடனுமா ? 100 சாப்பிட முடியுமா ?
ஒரு வேளை உணவாக 12 மணி நேரம் ஊறவைத்து(அதில் இருக்கும் அதிகப்படியான பைட்டிக் ஆசிட்டை குறைப்பதற்கு) வதக்கிய பாதாமை அதிகப்படியாக 100 எண்ணிக்கை வரை சாப்பிடலாம். பேலியோ உணவு முறையில் பசி அடங்கும் வரை நாம் உணவு உண்ண வேண்டும்.20 பாதம் சாப்பிட்டவுடன் பசி அடங்கி விட்டால், 20 பாதாமுடன் நிறுத்திக் கொள்ளலாம்.வறுத்த பாதாமை ,மணிக்கு ஒரு முறை ஐந்து அல்லது பத்து என்று உண்பதை தவிர்க்க வேண்டும்.
8.பிராய்லர் கோழி ஆபத்து இல்லையா?
பிராய்லர் கோழி ஈரல் போன்ற உள்ளுறுப்புகளில் அதற்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியாக இருக்க வாய்ப்பு உள்ளது. பேலியோவில் அடிக்கடி பிராய்லர் கோழி உண்பவர்கள் உள்ளுறுப்புகளை தவிர்த்து பிராய்லர் கோழி தசைகளை சாப்பிடுவதில் ஒன்றும் தவறு இல்லை.
9.பிராய்லர் சாப்பிடா பெண் குழந்தைகள் சீக்கிரம் வயசுக்கு வந்துடுவாங்களா?
இது ஒரு தவறான கருத்து.பாய்லர் கோழி வளர்க்க மக்கா சோள உணவுகள் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் சொட்டு மருந்து ஆண்டிபயாடிக் ஊசி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஹார்மோன் ஊசிகள் பயன்படுத்து இல்லை, ஏனென்றால் ஹார்மோன் ஊசிகளின் விலை கறிகோழிகளின் விலையை விட மிக அதிகம் .அதனால் பெண் குழந்தைகள் சீக்கிரமாக வயதுக்கு வருவது, பிராய்லர் கோழி உண்பதால் ஏற்படுவதில்லை.
10.வெயில் பட்டா எனக்கு தோலில் அலர்ஜி வருமே?
ஒரு சிலருக்கு வெயில் பட்டால் தோல் அலர்ஜி வரவாய்ப்பு உள்ளது அவர்கள் தங்கள் தோல் மருத்துவர்கள் அறிவுரைப்படி வெயிலில் தோல் படாமல் இருப்பது நல்லது. இவர்கள் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.அல்லது காலை ,மாலைகளில் சூரிய வெளிச்சத்தின் மூலம் சிறிதளவு கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்க முயற்சி செய்யலாம்.
11.கிட்னிக்கு பேலியோவில் (அதிக புரோட்டின் உணவு சாப்பிடுவதால்) ஆபத்து இல்லையா?
பேலியோ உணவுமுறை உண்பவர்கள் ஒரு நாளைக்கு தேவையான புரதத்தை (0.8-1 கிராம் ,ஒரு கிலோ எடைக்கு)தான் சாப்பிடுகிறார்கள். இதில் கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆரம்ப கட்ட கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் முறையாக பேலியோ உணவு சாப்பிடுவது மூலம் தனக்கு வந்த பாதிப்புகளை குணப்படுத்த முடியும்.
12.எவ்வளவு நாளுக்கு ஒரு தடவை சீட் பண்ணலாம்?
ஆரம்பத்தில் எடுக்கப்படும் எடை குறைவு டயட்டில் சீட்டிங் செய்யாமலிருப்பது நல்லது, அடிக்கடி சீட்டிங் செய்தால் நம்முடைய ரத்த பரிசோதனை முடிவில் உள்ள ஹார்மோன் அளவுகள் மாறாது. அதனால் எடை ஓரளவு குறைந்தாலும், மெட்டபாலிக் பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட முடியாது. ஒருமுறை சீட்டிங் செய்தால் பேலியோவில் இருந்து உங்கள் உடல் வெளியே சென்றுவிடும், மீண்டும் உங்கள் உடலை போலியோக்குள் கொண்டுவர ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை ஆகும். அந்த காலகட்டத்தில் உடல் எடை இழப்பு ஏற்படாது. எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
13.இரத்த பரிசோதனைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்தும் பேலியோ உணவுடன் கண்டிப்பா சாப்பிட வேண்டுமா?ஆமாம், அப்பொழுதுதான் ரத்தப்பரிசோதனை களில் உள்ள பிரச்சனைகள் முழுவதுமாக சரியாகும்.
14.மருந்து இல்லாம, பேலியோ உணவு மட்டும் சாப்பிட்டால் பீபி ,சுகர் குறையாதா ?
பேலியோ உணவின் மூலம் உங்கள் பீபி ,சர்க்கரையை குறைக்க சில மாதங்கள் ஆகலாம். அந்த காலகட்டத்தில் அதிக இரத்த கொழுப்பு, சர்க்கரை ,பீபி உங்கள் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையுடன் சர்க்கரை, பீபி மாத்திரைகளுடன் பேலியோ உணவுமுறை கடைபிடிப்பது தான் சிறந்தது.
15.இந்த உணவு முறையை எங்க டாக்டர் ஒத்துக்க மாட்டாரே?
அமெரிக்க சர்க்கரை நோய் சங்கம் கடந்த ஆண்டு -இரண்டு ஆண்டுகள் குறை மாவு சத்து உணவுகளை பரிசோதித்து தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இப்போது பல மருத்துவர்கள் இந்த உணவு முறையை தங்களுடைய நோயாளிகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து மருத்துவர்களும் இந்த உணவை பரிந்துரை செய்வார்கள்.அதுவரை நீங்கள் பொறுத்திருந்தால் உங்கள் உடல்நிலை மேலும் பாதிப்படையும்.
16.இட்லி ,சாதம் சாப்புடாம இருந்தால் வேலை செய்ய பலம் இருக்குமா?
பேலியோ உணவு முறையில் முறையான புரதம், கொழுப்பு உண்ணும்போது நம்முடைய வேலைகளை செய்ய பலம் அதிகமாக இருக்கும்.
17.எங்க தாத்தா,பாட்டி எல்லாம் சாதம், இட்லி சாப்பிட்டு 100 வயசு வரைக்கும் நல்லா இருந்தார்களே?
அந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, தற்போது வாகனங்கள் அதிகரித்துள்ளதால் நடப்பது குறைந்துள்ளது ,உடல் உழைப்பு குறைந்து உள்ளது ,வேலையில் டென்ஷன் அதிகமாகி உள்ளது, தூக்கம் குறைந்துள்ளது.பேக்கரியில் கிடைக்கும் துரித உணவுகள் ,பொறித்த உணவுகளை சாப்பிடுவது அதிகரித்துள்ளது. இப்போது உள்ள அரிசி, கோதுமையின் விளைச்சல் அதிகரிக்க மரபணுக்கள் மாற்றப்பட்டுள்ளது ,இதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக உள்ளது.புரதம் கொழுப்பு நம்முடைய உணவில் மிக குறைந்த அளவிலேயே நாம் உண்கிறோம்.ஆதலால் மாவு சத்து உள்ள உணவுகளை குறைத்து உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
18.பேலியோ சாப்பிட்டா உடம்புல இருக்குற எல்லா வியாதியும் சரியாயிடுமா ?இன்சுலின் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமே பேலியோ உணவு முறையால் கட்டுப்பாட்டுக்குள் வரும்.இது சர்வலோக நிவாரணி அல்ல. உடலில் எந்த நோயும் இல்லாதவர்களும் ஒரு ஆரோக்கிய உணவாக பேலியோ உணவை உண்ணலாம்.
19.எங்க வீட்டுல யாரும் அல்லோபதி மாத்திரைகள் சாப்பிட மாட்டோம் சார்?
அலோபதி மாத்திரைகளுடன் பேலியோ முயற்சி செய்தால் பலன் விரைவில் கிடைக்கும், இல்லாவிட்டால் பலன் கிடைக்க தாமதமாகும்.
20.நான் அடிக்கடி வெளியூர் போவேன்,அப்ப பேலியோ கடைப்பிடிக்க முடியுமா?
மனமிருந்தால் மார்க்கமுண்டு. பேலியோ உணவு முறையை அடிக்கடி பயணம் செய்பவர்களும் சுலபமாக கடைபிடிக்க முடியும்.
காலையில் முட்டை,பட்டர் டீ(சாதாரண டீ வாங்கி அதில் பிரட்டுடன் கிடைக்கும் அமுல் பட்டர் போட்டு தயார் செய்யலாம்), போகும்போது கையில் எடுத்து சென்ற வருத்த பாதாம் சாப்பிடலாம், தேங்காய், கொய்யாக்காய் சாப்பிடலாம். மதியம் காய்கறிகள் உண்ணலாம்.
இரவு முட்டை ,பனீர் அல்லது மாமிசம் எளிதாக ஹோட்டல்களில் சாப்பிடலாம்.
21.காய்ச்சல்,சளி வந்தா பேலியோ சாப்பிடலாமா ?
டாக்டர் கூறும் காய்ச்சல் சளி மாத்திரைகளுடன் பேலியோ உணவை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.
22.இவ்ளோ கம்மியா சாப்பிட்டா வேலை செய்ய முடியுமா ? நன்றாக தூக்கம் வருமா?
முறையான அளவு புரதம் கொழுப்பு இந்த பேலியோ உணவில் உண்பதால் பசி தாங்கும் சக்தி அதிகமாக இருக்கும்,நன்றாக உறக்கம் வரும், வேலை செய்ய சக்தி அதிகமாக இருக்கும்.
23.காப்பி,டீ குடிக்கலாமா ?
காபி ,டீ குடிக்காமல் இருப்பது நல்லது. பிளாக்காபி ,பிளாக் டீ, கிரீன் டீ பால் இல்லாமல் சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்.
24.எந்த பழங்கள் எல்லாம் சாப்பிடலாம் ?
ஆரம்பத்தில் எடை குறைய பழங்களை தவிர்ப்பது நல்லது.எடை குறைந்த பிறகு சிறிதளவு பழங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். பழுக்காத கொய்யாக்காய், அவகோடா, பெர்ரி பழங்கள் சாப்பிடலாம்.
25.பேலியோ சாப்பாடு ஹோட்டல்களில் சாப்பிட முடியுமா ?
வீட்டில் சமைத்து உண்ணும் போது நல்ல எண்ணையை சமையல் செய்ய உபயோகிக்க முடியும். மூன்று வேளையும் ஹோட்டல் உணவுகளை உண்டு உடல் எடையை குறைத்த பலர் நம் குழுவில் உள்ளனர் .
26.பேலியோ சாப்பிட்டால் முடி அதிகமாக கொட்டும்னு சொன்னாங்களே ?
நாம் உணவு முறையை மாற்றுவது, நம்முடைய உடலைப் பொறுத்தவரை உடலுக்கு அது ஒரு ஸ்டெர்ஸ் ,முக்கியமான உறுப்புகளுக்கு வேண்டிய சத்துக்களைக் உடல்கொடுத்து விட்டு ,முடி போன்ற முக்கியம் இல்லாத உறுப்புகளுக்கு கேறைவாக சத்துக்களை கொடுக்கும் .இதனால் ஆரம்பத்தில் முடி கொட்டும் பிரச்சனையில் இருக்கும். முறையாக புரத சத்துள்ள உணவுகளை உண்பது, 7முதல் 8 மணிநேரம் தூங்குவது,வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் பயோட்டின் மாத்திரைகளை உண்பது,ஷாம்பு, ஹேர்டை உபயோகம் செய்யாமல் இருப்பது மீண்டும் நல்ல சத்தான முடிகள் வளரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
27.பேலியோ சாப்பிடும் போது குடல் புண்(அல்சர் )சரியாகுமா ?
எனக்கு அல்சர் இருக்கு ,லெமன் ஜுஸ் குடிக்கலாமா ?
லெமன் ஜூஸ் குடிக்கலாம்.அல்சர் சரி ஆக உங்கள் மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மாத்திரைகளை பேலியோ உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். பேலியோ உணவு முறையில் தானியங்களை தவிர்க்கும் போது அல்சர் நோய் படிப்படியாக குணமாகும் வாய்ப்பு உள்ளது.
28.எனக்கு ஸ்டன்ட் வச்சு இருக்காங்க ,பைபாஸ் பண்ணி இருக்காங்க , நான் பேலியோ சாப்பிடலாமா ?
உங்கள் இருதய மருத்துவரின் அறிவுரையுடன் அவர் கூறியுள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,ரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கப்படும் மாத்திரைகள் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உடன் பேலியோவை முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு முறை மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் 20 சதவீதம் மீண்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேலியோ உணவின் மூலம் உடல் எடையை குறைத்து சர்க்கரை அளவுகளை, உயர் ரத்த அழுத்தத்தை , கொழுப்பு அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும்போது மீண்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு குறையும்.இவர்கள் மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் பேலியோ முயற்சி செய்யக்கூடாது.
29.எனக்கு சர்க்கரை நோயினால் ரத்த உப்பு (கிரியாட்டினின்(அளவுகள் கூடியுள்ளது, சிறுநீரக செயல்பாடு சிறிது குறைந்துள்ளதாக என்னுடைய மருத்துவர் கூறுகிறார் நான் பேலியோ முயற்சி செய்யலாமா?
முறையான சர்க்கரைநோய் வைத்தியம் மற்றும் பேலியோ குறைவான புரத சத்துடன்-0.6 கிராம் ஒரு கிலோ எடைக்கு(முட்டையுடன் கூடிய வெஜிடேரியன் பேலியோ , ஒன்று இரண்டு நாட்கள் சிறிதளவு சிக்கன் மட்டும்)முயற்சி செய்தால் ஆரம்பகட்ட சிறுநீரக பிரச்சனைகள் சரியாக வாய்ப்புள்ளது.
30.எனக்கு கிட்னி பெயிலியர் டயாலிசிஸ் பண்ண சொல்லி இருக்காங்க , நான் பேலியோ சாப்பிட்டா கிட்னி நார்மல் ஆகுமா ?
கிட்னி செயல் இழந்துவிட்டால் டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்ய முடியும். கிட்னி பழுது அடைந்த பிறகு பேலியோ முயற்சி செய்வது எந்த பலனையும் தராது.
31.சக்கரை கட்டுப்பாடு இல்லாம கால் விரல் எடுக்க டாக்டர் சொல்லி விட்டார் ,நான் பேலியோ மட்டும் சாப்பிட்டு சக்கரை வியாதி வைத்தியத்தை விட்டுடலாமா ?
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது காலில் புண் ஏற்பட்டு அது ஆறாமல் கால்விரல்கள் மற்றும் கால்களை எடுக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
அந்த நிலைக்கு சென்றவர்கள் முறையான சர்க்கரைநோய் வைத்தியத்துடன்(மாத்திரைகள்,இன்சுலின் ஊசி) பேலியோ உணவை முயற்சி செய்தால் புண் வேகமாக ஆற வாய்ப்புள்ளது.ஒரு சிலருக்கு கால் எடுக்காமல் விரலை எடுக்காமல் கூட காப்பாற்றி உள்ளார்கள்.
32.எனக்கு இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமா இருக்கு , பேலியோ சாப்பிட்டா ,இன்னும் கொலஸ்டிரால் கூடுமா ?
பேலியோ உணவுமுறையில் நாம் மாவு சத்து அளவுகளை குறைக்கும் போது உடலில் இருக்கும் வேண்டாத கொழுப்புகளை நம்முடைய உடல் சக்திக்காக எறிக்க ஆரம்பிக்கும், இதனால் ரத்த கொழுப்பு அளவுகள் குறைய வாய்ப்பு உள்ளது, கூடாது.நல்ல கொழுப்பு (HDL) அளவுகள் கூடும்,கெட்ட கொழுப்பு(Triglycerides) அளவுகள் குறையும்.
33.கல்லீரலில் கொழுப்பு படிந்து உள்ளது, பேலியோவில் அது குறையுமா ?
ஆரம்பக்கட்ட நிலை (stage 1,2 fatty liver)1 மற்றும் 2 ஆம் நிலையில் உள்ள கல்லீரல் கொழுப்பு படிதல் முழுவதுமாக குறையும்.
34.கல்லீரல் செயலிழந்து விட்டால் பேலியோவில் குணப்படுத்த முடியுமா?
மது அருந்துவதனால் ஏற்படும் ஆல்கஹாலிக் சிரோசிஸ் மற்றும் அதிக மாவு சத்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நான் ஆல்கஹாலிக் சிரோசிஸ் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் பயனடைந்துள்ளனர்.இறுதிகட்ட கல்லீரல் செயலிழப்பு உள்ளவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யமுடியும்.
35.பேலியோவில் ஸ்நாக்ஸ் என்ன சாப்பிடலாம் ?
பாதாம் ,வால்நட் ,மகடமியா போன்ற நட்ஸ் மற்றும் பழுக்காத கொய்யாக்காய், தேங்காய், அவகோடா,பெர்ரி பழங்கள் வெள்ளரிப்பிஞ்சு ,கேரட் சாலட் சாப்பிடலாம். லெமன் , பெரிய நெல்லிக்காய் சால்ட் ஜூஸ் குடிக்கலாம்.
36.சக்கரை இல்லாமல் பால் டீ குடிக்கலாமா ?
பாலில் இருக்கும் லாக்டோஸ் என்ற மாவு சத்து உடல் எடை குறைவதை தாமதப்படுத்தும், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவிடாது. அதனால் பிளாக் காபி, பிளாக் டீ, கிரீன் டீ ,பால் இல்லாமல், சர்க்கரை இல்லாமல் அருந்துவது நல்லது.
37.அடிக்கடி சாப்பிடலாமா ?
பேலியோ உணவு முறையில் பசிக்கும்போது வயிறு நிறைய உண்ண வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிடாமல் கூட இருக்கலாம். காலை உணவை தாமதமாகவும், இரவு உணவை சீக்கிரமாகவும் பணிரெண்டு மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்வது நல்லது. ஆரம்பத்தில் மூன்று நேர உணவு எடுத்துக்கொள்வது நல்லது. பசி குறைந்தப்பிறகு இரண்டு வேளை சில நாட்கள் வாரத்தில் முயற்சி செய்து பார்க்கலாம்.
38.பேலியோவில் எல்லாருக்கும் ஒரே மாதிரி உணவு தானா ?
உங்கள் ரத்தப் பரிசோதனை முடிவின்படி உங்களுடைய பேலியோ உணவுமுறை மாறுபடும்.சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக மாமிசங்கள் உண்ணக்கூடாது. ஆட்டோ யூனியன் பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் மற்றும் நல்லெண்ணெய் உபயோகிக்கக் கூடாது.தைராயிட் பிரச்சனைகள் உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி அளவாக உண்பது நல்லது.இரத்த அளவுகள் குறைவாக இருப்பவர்கள் கீரைகள் அடிக்கடி உண்ண வேண்டும் , ஆட்டு ஈரல் வாரம் ஒரு முறை உண்ணலாம். பல தூக்கம் உடற்பயிற்சி செய்பவர்கள்(புரத சத்துக்கள்) மாமிசங்கள் மற்றவர்களை விட அதிகமாக உண்ணலாம்.
அதனால் என்னுடைய நண்பர் சொன்னார், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் சொன்னார்கள் என்று அவர்கள் சொல்லும்படி பேலியோ முயற்சிக்கக் கூடாது
39.தண்ணீர் கண்டிப்பாக 2-3 லிட்டர் குடிக்கனுமா ?
நம் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். பேலியோ உணவின் போது உடலிலிருந்து வெளியேறும் தண்ணீரை சரிசெய்ய அதிக தண்ணீர் அருந்துவது நல்லது.இல்லாவிட்டால் உடல் சோர்வு அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.
40.எந்த உப்பு சாப்பிடலாம்?
இந்து உப்பு (ராக் சால்ட் ,பிங்க் சால்ட்) வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். இது தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது.
41.மது ,சிகரெட் பழக்கம் இருக்கு , பேலியோவில் மது, சிகரெட் தொடரலாமா ?
பேலியோ உணவு முறையை நாம் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்க உள்ளோம்.இதனால் பழைய உணவு முறையுடன் மது அருந்தக்கூடாது, சிகரெட் குடிக்க கூடாது . பேலியோ உணவுடன் மது அருந்துவதால் ஈரல் பாதிப்பு அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. மதுவை நிறுத்த முடியாதவர்கள் பேலியோ உணவை முயற்சி செய்ய வேண்டாம்.
42.இரத்த பரிசோதனைகள் இல்லாமல் பேலியோ உணவு எடுக்கக்கூடாதா ? நான் பார்ப்பதற்கு நன்றாக தானே உள்ளேன், எனக்கு ஒரு வியாதியும் இல்லை ,நான் ஏன் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்?
பேலியோ உணவை ஆரம்பிக்கும் போது நம்முடைய உடலில் சர்க்கரை அளவுகள், ரத்த கொழுப்பு அளவுகள், ஹார்மோன்கள், இரும்பு சத்து, வைட்டமின்கள் ,நம்முடைய கிட்னி ,ஈரல் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதித்துவிட்டு அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கு உண்டான மருந்து, மாத்திரைகளுடன் பேலியோ உணவு முறையை ஆரம்பிப்பது நல்லது. மூன்று மாதத்திற்கு பிறகு ரத்தப் பரிசோதனை செய்யும்போது அதில் எவ்வளவு முன்னேற்றம் உள்ளது என்பதை நாம் பார்க்க முடியும். வெளியில் பார்ப்பதற்கு பல நோய்கள் நமக்கு தெரியாது.
43.திரும்பவும் எப்பொழுது இரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டும்?அனைத்து பேலியோ பரிசோதனைகளும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்வது நல்லது.ரத்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நார்மல் ஆகிவிட்டால் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்தால் போதும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு வரும் வரை தினமும் சர்க்கரையை பரிசோதித்து பார்ப்பது நல்லது. சர்க்கரை அளவுகளை வைத்து முறையாக சக்கரை மாத்திரை , இன்சுலின் ஊசி அளவுகளை படிப்படியாக குறைக்க முடியும், சிலருக்கு மாத்திரைகள் ,இன்சுலின் ஊசிகள் நிறுத்திவிட முடியும்.கொழுப்பு சத்து அதிகமாக உள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு கொழுப்பு சத்து அளவுகளை மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.தைராய்டு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு தைராய்டு அளவுகளை பரிசோதனை செய்து தைராய்டு மாத்திரை அளவுகளைக் குறைப்பது நல்லது.
44.உடல் எடை எவ்வளவு நாளைக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்?
உடல் எடையும் ,இடுப்பு சுற்று அளவுகளையும் வாரம் ஒரு முறை பரிசோதித்து பார்த்தால் நல்லது. தினமும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
45.யாருக்கு எல்லாம் பேலியோ உணவுகள் உதவும்?
யார் வேண்டுமானாலும் பேலியோ உணவை உண்ணலாம்.உடல் எடையை குறைப்பதற்கு, உடல் எடையைக் கூட்டுவதற்கு ,உடல் எடையை அதே நிலையில் வைப்பதற்கு, தசை எடையைக் கூட்டுவதற்கு, உடல் கொழுப்பு அளவுகளை குறைப்பதற்கு வேறு வேறு மாதிரியான உணவு முறையை முயற்சி செய்து உண்ண வேண்டும்.
46.குழந்தைகள் பேலியோ உணவு சாப்பிடலாமா ?
குழந்தைகள் வளர்ச்சிக்கு மாவுச்சத்து உணவுகள் தேவையாக உள்ளதால், அவர்கள் துரித உணவுகள் பேக்கரி உணவுகளை தவிர்த்து இட்லி ,தோசை, சாதம் ,சப்பாத்தி மற்றும் பழங்கள் ,முட்டை ,இறைச்சி, முலைக்கட்டிய தானியங்கள் உண்ணலாம். மைதா உணவுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் டிவி மொபைல் லேப்டாப் ஐபேட் உபயோகம் செய்வதைத் தவிர்த்து வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால் 14 வயதிற்கு பிறகு முழுமையான பேலியோவை குழந்தைகள் முயற்சி செய்யலாம்.
47.வயசு ஆனவங்க பேலியோ சாப்பிடலாமா ?
எந்த வயதிலும் பேலியோ உணவை கடைபிடிக்கலாம்.
வயதிற்க்கு தகுந்தாற்போல உணவை மாற்றி உண்ண முடியும்.90 வயதில் கீட்டோ உணவை உண்டு மராத்தான் ஒடியவர்கள் இருக்கிறார்கள்.
48.ஆண்களுக்கு குழந்தை யின்மை சரி செய்ய பேலியோ உதவுமா ?
ஆண்களுக்கு உடல் பருமன் குறையும் போது, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் போது மற்றும் பேலியோ உணவின் போது மது மற்றும் சிகரெட் நிறுத்தும்போது அவர்களுடைய செக்ஸ் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுடைய விந்து எண்ணிக்கை அதிகமாகவும் ,அவர்களின்விந்துக்களின் அசைவுகள் அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது.
49.பெண்களுக்கு குழந்தையின்மை, மாதவிடாய் பிரச்சனைகள் சரி செய்ய உதவுமா ?
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், பிசிஓடி ,தைராய்டு பிரச்சினைகள், உடல்பருமன் முதலியவை இத்தாலிய உணவு முறையால் கட்டுப்பாட்டுக்குள் வரும், அப்போது குழந்தையின்மை பிரச்சினை சிகிச்சை வெற்றியடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
50. குழந்தையின்மை பிரச்சினைக்கு பேலியோ ரத்தப்பரிசோதனை மட்டும் செய்தால் போதுமா?
பேலியோ ரத்தப்பரிசோதனையுடன் தங்கள் ரத்த ஹார்மோன் அளவுகள் மற்றும் ஸ்கேன் செய்ய வேண்டி இருக்கும்.
51.உடல் எடை 100 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள்,ரத்தக் கொழுப்பு அளவுகள் அதிகமாக உள்ளவர்கள் நீண்ட நாட்கள் சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வேறு ஏதாவது பரிசோதனை செய்ய வேண்டுமா?
இவர்கள் பேலியோ ரத்த பரிசோதனை யுடன் இசிஜி மற்றும் வயிற்றுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் இருதய மருத்துவரிடம் காண்பித்து எக்கோ மற்றும் ட்ரெட்மில் டெஸ்ட் செய்யவேண்டும்.
52.பேலியோ சாப்பிட்டால் தோல் வியாதிகள் விட்டிலிகோ (வெண் தேம்பல்) , சோரியாஸிஸ் சரியாகுமா ?
இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வரும் ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள். இவை ஆட்டோ யூனியன் பேலியோ உணவு முறை பாலோ செய்தால் நாம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
53.பேலியோ சாப்பிடும் போது உடற்பயிற்சி அவசியமா ? ஜிம்முக்கு போலாமா ? யோகா பண்ணலாமா ?
பேலியோ ஆரம்பித்தவுடன் நம்முடைய உடல் இந்த உணவிற்கு பழகும் வரை நடைப்பயிற்சி மட்டும் போதும். நீங்கள் இந்த உணவிற்கு அடாப்ட் ஆகிவிட்ட பிறகு நீங்கள் எந்த உடல் உடற்பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம். சைக்கிள் ஓட்டுவது ,விளையாடுவது, ஜிம்முக்கு செல்வது ,ஜும்பா டான்ஸ் செலய்வது போன்ற எந்த உடற்பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம்.
54.சரவாங்கி (மூட்டு வலி ) சரியாகுமா ?
சரவாங்கி நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வரும் ஒரு ஆட்டோ இம்யூன் பிரச்சினை இதை மாற்ற ஆட்டோ இம்யூன் பேலியோ டயட் எடுப்பதன் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும், குணப்படுத்துவது சிரமம்.
55.முதுகு வலி சரியாகுமா ?
எடை அதிகமாக இருப்பதினால் முதுகு வலி ஏற்பட்டு இருந்தால் எடை குறையும் போது முதுகு வலி குறைய வாய்ப்புள்ளது. வேறு ஏதாவது தண்டுவட பிரச்சினையினால் முதுகு வலி இருந்தால் அதற்கு முறையாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து நாம் சிகிச்சை எடுக்க வேண்டும்.
56.எடை எல்லோருக்கும் ஒரே மாதிரி குறையுமா ?
எடை குறைவது ஒருவருக்கும் வேறுபடும். பெண்களைவிட ஆண்களுக்கு வேகமாக உடல் எடை குறையும்.பெண்களில் தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு உடல் எடை குறைவது தாமதமாகும்.
57.எவ்வளவு எடை குறைக்க வேண்டும்?
உதாரணத்திற்கு உங்கள் உயரம் 150 சென்டிமீட்டர் ஆக இருந்தால், அதில் நூறை கழித்தால் வரும் 50 தான் நீங்கள் இருக்க வேண்டிய எடை.அந்த எடையை அடையும் வரை நீங்கள் உங்கள் எடை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
58.எடை மட்டும் கொஞ்சம் குறைந்தால் போதுமா?ரத்தப் பரிசோதனையில் உள்ள பிரச்சினைகளும் சரியாக வேண்டும்?
நம்முடைய டார்கெட் ரத்தப் பரிசோதனையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது தான்.அதுவரையில் பேலியோ உணவை நாம் முறையாக பாலோ செய்து விட்டு,பிறகு வாழ்நாள் முழுவதும் நாம் மெயின்டனன்ஸ் பேலியோ உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.
59.எடை குறைவது திடீர் என்று நின்று விட்டால் என்ன செய்ய வேண்டும் ?
வாரியர் உணவு முறையை முயற்சி செய்து பார்க்கலாம் மூன்று வேளைக்கு பதில் இரண்டு வேளை ,உணவு உண்ணும் நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து எட்டு மணி நேரம், அல்லது 6 மணி நேரமாக குறைப்பது.இந்த முறை சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல் மாத்திரைகள், இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டு இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி முயற்சிக்கக் கூடாது.
60.பேலியோவில் முதலில் குறைந்தது போல நாளாக நாளாக வேகமாக எடை குறைவது இல்லையே ஏன் ?
பேலியோ ஆரம்பித்தவுடன் நம் உடலில் வெளியில் இருக்கும் கொழுப்புகள் வேகமாக கரையத் தொடங்கும், கடைசியில் உள்ளுறுப்புகளில் நம்முடைய கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் கொழுப்புகள் கரையும் உணவு முறையில் சில மாறுதல்களை செய்ய வேண்டும் (உதாரணத்திற்கு வாரியர் உணவு முறை கடைப்பிடிக்கும் போது உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்புகள் வேகமாக கரைய தொடங்கும்)
61.பேலியோ சாப்பிடும் போது உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டால் வேறு மருத்துவர்கள் சொல்லும் உணவு , மாத்திரைகள் சாப்பிடலாமா ?
நாம் சாப்பிடும் உணவை மட்டும் தான் பேலியோ உணவு முறையில் மாத்தி சாப்பிடுகிறோம்.இதனால் உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் கூறும் உணவையும், மருந்துகளையும் தாராளமாக சாப்பிடலாம்.
62.பேலியோ சாப்பாட்டை நிருத்தி விட்டால் என்ன ஆகும் ?
பேலியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் நம்முடைய உடலில் என்ன பிரச்சினைகள் இருந்ததோ அது எல்லாம் திரும்பி வரும் . வேறு புதிய பிரச்சினைகள் ஏற்படாது .
63. பேலியோ ஒரு வருடம் கடைபிடித்து விட்டு, ஒரு வருடம் விட்டு விட்டேன், நான் திரும்ப பேலியோ ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?
திரும்பவும் பேலியோ ரத்தப்பரிசோதனை செய்து ,பேலியோ ஆரம்பத்தில் ஆரம்பித்தது போல ஆரம்பிக்க வேண்டும்.
64. பேலியோ ,கீட்டோ இரண்டும் ஒன்றா?
பேலியோ மாவு சத்து உணவுகளை40- 50 கிராமுக்குள் உண்பது , கேட்டோர் மாவு சத்து உணவுகளை 20 கிராமுக்குள் உண்பது.
65. வெஜிடேரியன் மட்டும் உண்பார்கள், பிரியமுடன் முட்டை மட்டும் உண்பவர்கள் பேலியோ சாப்பிட முடியுமா?
பேலியோ வெஜிடேரியன் மட்டும் உண்பவர்களுக்கு தனியாக டயட் சார்ட் உள்ளது. ஒரு தேசத்துக்காக வெஜிடேரியன் உணவுடன் முட்டை மட்டும் சேர்த்து உண்பது நல்லது . வெஜிடேரியன் உண்பவர்கள் பரத சத்துக்காக தங்கள் உணவில் பாதாம் வால்நட் பனீர் சீஸ் பிரக்கோலி சேர்த்துக் உண்கிறார்கள்.
66. வெஜிடேரியன் உணவுடன் தினமும் மாமிசம் சேர்த்து உண்ணலாமா??
இரண்டும் சேர்த்து உண்ணும் உணவு முறை தாராளமாக செய்யலாம். அதிகப் பலன் ஒருவேளை முட்டை ஒருவேளை காய்கறி கீரைகள் ஒருவேளை மாமிசம் உண்பவர்களுக்கு தான் இந்த உணவில் கிடைக்கிறது.
67. நனி சைவம் முறையில் அனைத்து சத்துக்களும் கிடைக்குமா?
நனி சைவ முறையில் புரத சத்து குறைவாக கிடைக்கும், இரும்பு சத்து வைட்டமின் பி12 குறைவாக கிடைக்கும். இதற்கு அவர்கள் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளலாம்.
68. இந்த உணவு முறையுடன் ஹோமியோபதி ,சித்தா ,ஆயுர்வேத, யுனானி மருந்துகள் எடுத்து கொள்ளலாமா?
முறையாக சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி பயின்று பட்டம் பெற்ற மருத்துவர்கள் இடம் ஆலோசனை பெற்று முயற்சி செய்யலாம். நான் அலோபதி மருத்துவர் என்பதால் அதைப்பற்றி எனக்கு தெரியாது.