
டாக்டர். ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.
தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் அதிகமாக உயிரிழந்தவர்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் தான்.
3 மாத சர்க்கரை அளவை தங்களுடைய ரத்தப்பரிசோதனை மூலம் ஒருவர் தெரிந்துகொள்ளலாம். Hba1c – என்ற ரத்த பரிசோதனை மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இது 5.5 க்கு கீழ் இருப்பவர்கள் சர்க்கரை நோய் இல்லாதவர்கள்(Non diabetic). Hba1c-(5.5 -6.4) வரை உள்ளவர்கள் சர்க்கரை நோய் ஆரம்பம் ஆகும் முன் நிலையில் இருப்பவர்கள் (pre diabetic). Hba1c-6.4 க்கு மேல் உள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து Hba1c – 6 முதல் 7 இதை வைத்துக் கொள்வது நல்லது.
Hba1c – 7க்கு மேல் இருந்தால் உடலில் சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம்.
Hba1c-8 க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் நம்முடைய உடல் உள்ளுறுப்புகளை பாதிக்க தொடங்குகிறது என்று அர்த்தம். சக்கரை நோய் தலைமுதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் ஒரு நோய்.
பக்கவாதம் (stroke), மாரடைப்பு (heart attack),
சிறுநீரக செயலிழப்பு (kidney failure), காலில் ஆராத புண்கள் மற்றும் கால் விரல்கள் அகற்றுதல் ,கண் பார்வை இழப்பு ( Retinopathy) இதுபோன்ற பல வியாதிகள் சர்க்கரை நோய் நம் உடலில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்போது வருகிறது.
நமக்கு சர்க்கரை நோய் உடலில் கண்டுபிடிக்கப்படும் போது உடலின் உள்ளுறுப்புகளில் சர்க்கரை நோயின் பாதிப்பு 50 சதவிகிதம் ஏற்பட்டிருக்கும்.அதனால் சர்க்கரை நோய் நம் உடலில் வந்த நாளிலிருந்தே வாழ்நாள் முழுவதும் நாம் இரத்த சக்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
தற்போது கொரோனா நோய் ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருப்பதினால் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வதில்லை, உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார்கள். அதில் இனிப்பை அதிக அளவு சேர்த்துக் கொள்கிறார்கள். மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி அதற்கு தகுந்தார்போல் அதிகப்படுத்தி எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவர்களை சந்திப்பதில்லை.இதனால் சர்க்கரை வியாதி பலருக்கு கட்டுப்பாடு இல்லாமல் போய் உள்ளது .
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5% முதல் 10 சதவிகிதம் வரை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் தான் அதிகம்.இவர்களுக்குதான் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
கொரோனா நோயினால் அதிகமாக மரணமடைந்தவர்களும் சர்க்கரை நோய் உடலில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களும் தான்.
சர்க்கரை நோயை பேலியோ உணவின் மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் போது உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதிக பாதிப்பு ஏற்படாது.
சக்கரை நோய் உள்ளவர்கள் மெயின்டனன்ஸ் பேலியோ முயற்சி செய்ய வேண்டாம். தினமும் ஒரு நேரம் குறைந்த அளவு அரிசி சாதம், இட்லி ,சப்பாத்திஅல்லது தோசை என்று சேர்க்க வேண்டாம்.ஏதாவது ஒரு நாள் ஆசையாக இருந்தால் மாவுச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். இனிப்புகள் சேர்க்காமல் இருப்பது நல்லது . உங்களுடைய சர்க்கரை நோய் பேலியோ உணவின் மூலம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது,முற்றிலும் குணமடையவில்லை . உங்களுக்கு உள்ள இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் ரிவர்ஸ் ஆக பல வருடங்கள் ஆகும். நீங்கள் மாவுச்சத்து உணவுகளுக்கு மிகவும் சென்சிடிவ் ஆக இருப்பீர்கள் . எப்படி குறைந்த அளவு மது அருந்திவிட்டு நிறுத்த முடியாதோ அதேப்போல மாவுச்சத்து உணவுகளையும் குறைந்த அளவில் எடுக்க முடியாது .
Hba1c -7.5 க்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
அடிக்கடி வாரம் ஒரு முறையாவது உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.உங்கள் எடை ,இரத்த அழுத்தத்தையும் பரிசோதனை செய்வது நல்லது.
உடல் எடை கூட ஆரம்பித்தால் மீண்டும் சக்கரை அளவுகள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது .
வருமுன் காப்போம்.